ஐஆர்சிடிசி இணையதளத்தில்முன்பதிவு செய்யும் டிக்கெட்களுக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தப்போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் மத்திய அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக மேற்கொள்ள மத்திய அரசு ஊக்கப்படுத்தியது.
அப்போது ஐஆர்சிடிசி தளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யும் டிக்கெட்களுக்கான சேவைக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன.ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் ஏசி இல்லாத இருக்கைகளுக்கான டிக்கெட்களுக்கு 20 ரூபாயும், ஏசியுடன் கூடிய இருக்கைகளுக்கான டிக்கெட்களுக்கு 40 ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டிக்கெட் முன்பதிவுக்கான சேவைக் கட்டணத்தை மீண்டும் வசூலிக்க இந்திய ரயில்வே முடிவுசெய்துள்ளது. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. சேவைக் கட்டணங்கள் தற்காலிகமாகத்தான் ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்ததாகவும், இப்போது ரயில்வே அமைச்சகம் மீண்டும் கட்டண வசூலில் இறங்கியுள்ளதாகவும் ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவுக்கான சேவைக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு 2016-17ஆம் ஆண்டில் ஐஆர்சிடிசிக்கு 26 சதவிகித வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டண முறையைத் தொடரலாமா அல்லது கட்டணங்களை மேலும் உயர்த்தலாமா என்று ஐஆர்சிடிசி ஆலோசித்து வருகிறது.