வேலூரில் திமுக கதிர் ஆனந்த் வெற்றி! இதை ஸ்டாலினுக்கு காணிக்கை ஆக்குவதாக கதிர் ஆனந்த் அறிவிப்பு

வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

 

இந்நிலையில், ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். அதை அடுத்தும் அவர் முன்னிலையில் இருந்தார்.நான்கு சுற்று வரை முன்னிலையில் இருந்த சண்முகம் பின்னர் இறங்கு முகமானார்.

 

இறுதியில், வாக்கு எண்ணிக்கை முடிவில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்றுள்ளது. திமுகவின் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுகவின் ஏ.சி.சண்முக 4,77,199 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சமி 26,995 வாக்குகள் பெற்றுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் கதிர் ஆனந்திடம் வழங்கினார்.

 

வேலூர் வெற்றியால் மக்களவையில் திமுக எம்பிக்களின் பலம் 24 ஆகவும், தமிழகத்தில் திமுக கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 38 ஆகவும் உயர்ந்துள்ளது.வேலூரில் திமுக பெற்ற வெற்றி ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும், இதனை ஸ்டாலினுக்கு காணிக்கை ஆக்குவதாகவும் கதிர் ஆனந்த் கூறியுள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.


Leave a Reply