அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதன் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கு வழங்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது.
அதன்படி 3 பேர் கொண்ட குழு கடந்த 5 மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் சமரசப் பேச்சுகள் நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தை விவரங்கள், எட்டப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை சமரசக்குழுசீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்திடம் நேற்று வழங்கியது.
மேலும் அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை எனவும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணமுடியவில்லை எனவும் மத்தியஸ்தர்கள் தெரிவித்தனர். மத்தியஸ்தர்களின் சமரச முயற்சியின் தோல்வியை குறிப்பிட்டஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.