மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் 4 வாரத்திற்குள் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வாகனத்தில் சென்ற மாணவி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில், சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனம் ஒன்றில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரால் 4 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க கோரி, தமிழக அரசுக்கு கடந்த மாதம் மனு அளித்தது. ஆனால் இதுவரை எனது கோரிக்கைக்கு, தமிழக அரசு செவி சாய்யக்கவும் இல்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை.
எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பான பயணத்தை பெற்றோர்கள், இணையதளம் மூலம் கண்காணிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.முன்னதாக இந்த வழக்கானது, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டடது.
அப்போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளரையும் நீதிபதிகள், எதிர்மனுதாரராக சேர்த்ததை அடுத்து, இவ்விகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதுதொடர்பான உத்தரவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கானது இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும், ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவை எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த கருவிகளின் மூலம் பள்ளி வாகனங்களை கண்காணிக்க தனியார் பள்ளிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கவும், அதனை அமல்படுத்தியது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அளிக்க கடந்த 22 ஆம் தேதியன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவின் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ந்த உத்தரவானது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்தும் தமிழக அரசின் உத்தரவை 4 வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளனர்.