பண மோசடியால் சாக போகிறேன்! 10 பக்கத்துக்கு லெட்டர்! தற்கொலை

பண மோசடியால் சாக போகிறேன் என்று 10 பக்கத்துக்கு லட்டர் எழுதி வைத்துவிட்டு, தற்கொலைக்கான விளக்கத்தை வீடியோவிலும் பேசிவிட்டு இறந்துவிட்டார் ஒரு இளைஞர். ஆனால் போலீசார் வீடியோ தடயங்களை அழித்துவிட்டதாக கூறி, உறவினர்கள் இளைஞரின் சடலத்தை டெம்போவில் ஏற்றி கொண்டு வந்து மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சேலத்தை அடுத்த மல்லூர் வாழக்குட்டப்பட்டி கீழ்தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு வயது 27. இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 4 வருஷமாக அரசு வேலைக்கும் முயற்சி செய்து வந்தார்.அப்போது, பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக சிலர் சக்திவேலிடம் லட்சக்கணக்கில் பணத்தை கறந்துவிட்டதாக தெரிகிறது.

 

பணத்தை பெற்றுக் கொண்ட சிலர், சக்திவேலிடம் உதவி செயற்பொறியாளருக்கான போலியான பணி ஆணையும் வழங்கிவிட இந்த விஷயம் போலீசுக்கு போக. அதனால் சக்திவேலு கைது செய்யப்படலாம் என்ற விஷயம் பரவ ஆரம்பித்தது. இப்படி ஒரு ஏமாற்றத்தை தாங்க முடியாத சக்திவேல், மனமுடைந்து காணப்பட்ட நிலையில், வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு குடிசையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக 10 பக்க கடிதமும், ஏன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற விளக்கத்தையும் செல்போனில் வீடியோவாக பதிந்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் தகவலறிந்து வந்த மல்லூர் போலீசாரும், சக்திவேலின் செல்போன் கேமரா மட்டும் ஆன் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் எந்த வீடியோவும் பதிவாகவில்லை என்றும் சொன்னார்கள்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசார் அந்த வீடியோ ஆதாரத்தை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டி, சக்திவேலின் உடலை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையின் நடுரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். வேலை வாங்கி தருவதாக 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஏமாற்றி உள்ளவர்களை கைது செய்ய வேண்டும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

 

கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டுவிட்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக டிராபிக் ஜாம் ஏற்பட்டது. பின்னர் விரைந்து வந்த அதிகாரிகள், “10 பக்க லட்டர் கைப்பற்றி இருக்கிறோம், அதில் 9 பேர்தான் தன் சாவுக்கு காரணம் என சக்திவேல் எழுதி வைத்துள்ளார். அதன்பேரில் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதி தந்த பிறகே மக்கள் கலைந்து சென்றனர்.


Leave a Reply