கோவையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மார்க்ஸ் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தபால் உறை வெளியிடப்பட்டது.கோவை போத்தனூர் பகுதியில் ரயில்வே பணிமனை வளாகத்தில் உள்ள புனித மார்க்ஸ் ஆலயம் கடந்த 1918ம் ஆண்டு கட்டப்பட்டது. கேரளாவில் இருந்து சிவப்பு கற்களை கொண்டு வந்து கட்டப்பட்ட இந்த ஆலயம் தற்போது வரை பழமை மாறாமல் அப்படியே உள்ளது.
ஆலயத்தின் உள்ளே வண்ண கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட இயேசு நாதர் உருவம் இன்றளவிலும் பொலிவு மாறாமல் இருப்பதும்,மேலும் 100 வருடங்கள் பழமையான மின் விளக்கும் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி புனித மார்க்ஸ் ஆலயத்தின் தபால் உறை வெளியிடும் விழா இன்று நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் நடைபெற்ற இதில் கோவை பிஷப் திமோத்தி ரவீந்திர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை மேற்கு மண்டல அஞ்சல் துறை அதிகாரி திருமதி சியூலி பர்மன் ஆலய நூற்றாண்டு தபால் உறையை வெளியிட்டு பேசினார்.
அப்போது,அவர் பள்ளி பருவத்தில் நாம் பெறும் நல்ல ஒழுக்கங்கள் மட்டுமே வாழ்வின் எல்லா நிலைகளிலும் நல்ல வளர்ச்சிகளை பெற்று தரும் என பேசினார்.விழாவில் சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் அண்ணாதுரை, சிஎஸ்ஐ செயலாளர் போதகர் சார்லஸ் சாம்ராஜ், துணைத்தலைவர் ரிச்சர்ட் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.