தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே நிறைவேற்ற கோரிக்கை

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்திலேயே நிறைவேற்ற கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வந்தது.

அப்போது,அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக மனு கொடுக்க வந்த 50 க்கும் மேற்பட்டோர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியலில் இருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்டகாலமாக போராடி வருவதாகவும்,தற்போது சட்டமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில் உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வேலூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட உள்ளதாகவும்,மேலும் சட்டமன்றம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply