அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

மாணவிகள் தனக்கு நடக்கும் அநீதிகளை தைரியமாக பெற்றோர்களிடம் கூறவேண்டும். அவினாசி சார்பு நீதிபதி எஸ். பிரபா சந்திரன் பேச்சு.அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழு நடத்தும் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை திலகவதி (பொறுப்பு ) தலைமை தாங்கினார்.

 

ஆசிரியர்கள் கண்ணன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் கமரன் ( KAMARAN ) வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட வழக்குரைஞர்கள் யோகேஷ், மனோகரன் ஆகியோர் சட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். இதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவினாசி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எஸ்.பிரபா சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

 

அப்போது அவர் பேசியதாவது : நாம் எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்பதை வீட்டில் பெற்றோர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். அதையே வீட்டிற்கு வெளியே சமுதாயத்தில் சொல்லிக்கொடுப்பது தான் சட்டம்.

நியாயமான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அந்த சட்ட உதவி மையத்தில் வந்து கூறினால் சட்ட பணிகள் குழுவில் உள்ள வழக்குரைஞர், நீங்கள் சொன்ன புகாரை பெற்று எழுத்து வடிவம் கொடுத்து புகாராக தயார் செய்து அது குற்றவியல் வழக்காக இருந்தால் காவல் துறைக்கும், உரிமையில் வழக்காக இருந்தால் சிவில் ரைட்ஸ் பிரிவுக்கும் அனுப்பி வைப்பார்.

 

புகாரின் பாதிப்பு நியாயமாக இருக்கும் பட்சத்தில் பேனா, பென்சில் உள்பட எந்த செலவும் இல்லாமல் அரசே பணம் கொடுத்து உங்களுக்கு ஒரு வக்கீலை நியமித்து வழக்கு பதிவு செய்யப்படும். பின்னர் இதற்கு எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டு அதற்கான வழக்குரைஞர் நியமிக்கப்பட்டு எந்த கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டுமோ அந்த கோர்ட்டுக்கு பரிந்துரைக்கப்படும்.

 

இதற்காக வேறு யாரிடமும் சென்று எந்த செலவும் செய்யவேண்டியதில்லை. வழக்கறிஞர் கட்டணத்தையும் சட்ட உதவி மையம் மூலம் அரசாங்கமே கொடுத்துவிடும். ஒரு ஊரில் கோர்ட்டு என்று இருந்தாலே அங்கு சட்ட உதவி மையம் இருக்கும். இதற்காக அந்த மையத்தில் தினமும் அலுவலர் நியமிக்கப்பட்டு பணி நேரத்தில் அவர் உங்கள் பிரச்சினையை கேட்டு அதற்கு எழுத்து வடிவம் கொடுத்து பிரச்சினை தீர்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை நீங்கள் உங்கள் வீட்டில், தோழிகள், உறவினர்கள், உள்பட மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை தைரியமாக பெற்றோர்களிடம் கூறவேண்டும். முடியாவிட்டால் ஆசிரியர்களிடம் அல்லது நேரிடையாக போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

முன்னதாக மாணவிகளிடம் பெண்களின் தாய்மையை பற்றி எடுத்து கூறினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியை நாகவேணி நன்றி கூறினார். பின்னர் 10 ம் வகுப்பு மாணவி சண்முகப்பிரியா உள்பட பல மாணவிகள் சட்ட உதவிகள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். முகாமில் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Leave a Reply