பேஸ்புக் வலைதளத்தில் நட்பாக பழகி திருமணமான இளம்பெண்ணை கடந்த ஓராண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், அனந்தப்புரம் மாவட்டம், ராயதுர்கம் நகரை சேர்ந்த வாலிபருக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். அந்த பெண் தனது வீட்டின் அருகில் உள்ள கடையில் தினமும் சென்று பால் வாங்கி வருவது வழக்கம். அந்த கடையில் வேலை செய்யும் மகேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையில், பேஸ்புக் மூலமாக பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் ஆகிய 3 பேரும் இளம்பெண்ணுடன் தனித்தனியாக சாட்டிங் செய்து வந்துள்ளனர்.இந்தப்பழக்கத்தின் மூலம் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பேசி வந்துள்ளனர்.
அப்போது இளம்பெண் 3 பேரிடமும் தனக்கும் மகேஷுக்கும் உள்ள நட்பு குறித்தும் தெரிவித்தாராம். இதை கேட்ட 3 பேரும் மகேஷுடன் உள்ள பழக்கத்தை உனது குடும்பத்தினரிடம் தெரிவித்து விடுவோம். அவ்வாறு தெரிவிக்காமல் இருக்க வேண்டுமென்றால் எங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என கூறினராம்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கடுமையாக மறுத்துள்ளார். அதற்கு பவன் உள்பட 3பேரும், தங்களது விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் உனது கணவர், குழந்தையை கொலை செய்து விடுவோம். உன் மீது ஆசிட் வீசுவோம் எனவும் மிரட்டல் விடுத்தார்களாம்.
இதற்கிடையே இளம்பெண்ணிடம் நட்பாக பழகி வந்த மகேஷும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இந்நிலையில் இளம்பெண்ணை மகேஷ், பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த ஓராண்டாக அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தொடர்ந்து இவர்களின் தொல்லை அதிகமானதால் மனவேதனை அடைந்த இளம்பெண் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் ராயதுர்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து ராயதுர்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ், பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.