ஏர்வாடி சந்தனக் கூடு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் அல் குத்பு சுல்தான் செய்ய து இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா 845 ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா நடத்தப்படும் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக் கூடு விழாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்தாண்டு விழா ஜூலை 4 ஆம் தேதி பாதுஷா நாயகத்தின் மவுலீது ( புகழ் மாலை) உடன் விழா தொடங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தர்ஹா வளாகத்தில் இன்றைய தினம் மாலை அடி மரம் ஏற்றப்பட்டது. மாலை 4 மணியளவில் மேள, தாளம் முழங்க யானை, குதிரை முன் செல்ல அலங்கரிக்கப்பட்ட கூடு ஏராளமான மக்கள் பின் தொடர ஊர்வலமாக தர்கா வந்தடைந்தது.

இரவு 7:40 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஜூலை 26 ஆம் தேதி மாலையில் தொடங்கும் சந்தனக் கூடு ஊர்வலம், ஜூலை 27 ஆம் தேதி அதிகாலை வரை நடக்கிறது. இதன் தொடர் நிகழ்வாக புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் பொதுக்குழு செய்திருந்தனர்.


Leave a Reply