பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் பதிலடி- பிபின் ராவத்

பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால் கடும் தண்டனையாக அமையும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்று உரையாற்றினார். தீவிரவாதிகள் மூலமும், ஊடுருவல் மூலமும், மறைமுக போர்கள் மூலமாகவும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது குருட்டு சாகசங்களில் இறங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 

எல்லைகளை உறுதியாக பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவம் இத்தகைய குருட்டு சாகச முயற்சிகளுக்கு தகுந்த பதிலடி வழங்கும் எனவும் விபின் ராவத் கூறினார். கார்கில் போரின் போது இந்திய வீரர்கள் எத்தனையோ தடைகளை தவிர்த்து வீரம் செறிந்த போர் மூலம் மாபெரும் வெற்றியை ஈட்டியதாக பாராட்டு தெரிவித்தார். யூரி தாக்குதலை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டிலும் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாலக்கோட்டிலும் நடத்தப்பட்ட சர்ஜிக்கள் தாக்குதல்கள், தீவிரவாதத்தை கையாள்வதில் இந்தியா அரசியல் ரீதியாக எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை காட்டுவதாகவும் பிபின் ராவத் குறிப்பிட்டார்.

 

எதிர்காலங்களில் போர்களில் தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார். அதே சமயம் எதிர்காலங்களில் ராணுவ மோதல்கள் அதிக வீரியம் மிக்கதாகவும், முன் கணிக்கமுடியாததாகவும் இருக்கும் என்பதால் மனிதர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதை அவர் தெரிவித்தார். இந்திய ராணுவத்தை பொருத்த வரையில் வீரர்களே முதன்மையான சொத்துக்கள் என்றும்,பிபின் ராவத் தெரிவித்தார்.


Leave a Reply