காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 20 கோடியே 69 லட்சம் ரூபாய் கடன் மோசடி, கையாடல் குறித்த வழக்கை சிபிஐ க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் காஞ்சிபுர மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லாவரம், போரூர் கிளைகளில் 69 லட்சம் ரூபாய் கடன் மோசடி கையாடல் தொடர்பாக போரூர் பல்லாவரம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐ க்கு மாற்ற கோரிய முன்னாள் ஊழியர் பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பாபு மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டை நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது முழு மோசடியும் வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி குறித்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் ஏற்கனவே சிபிஐ வசம் ஏராளமான வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளதால் இந்த வழக்கை விசாரித்து முடிக்க எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை எனவும் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.