போலீசார் போல் நடித்து மூன்றரை கோடி ரூபாய் கொள்ளை

ஈரோடு அருகே காவல் துறையினர் போல் நடித்து மூன்றரை கோடி ரூபாயை கொள்ளை அடித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கேரள மாநிலம் மலப்புழை மாவட்டத்தில் ஒரு பகுதியை சேர்ந்தவர் அன்வர்சதர் சென்னை , கோவை ஆகிய பகுதிகளில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் டோல் கேட் அருகே கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி போலீசார் போல் வேடம் அணிந்து வந்த சிலர் அவரது காரை மடக்கி அதிலிருந்த மூன்றரை கோடி ரூபாய் பணத்தை எடுத்து சென்றனர்.

 

இதையடுத்து பெருந்துறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று விஜயமங்கலம் டோல் கேட் அருகே பெருந்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் பதிவெண் கொண்ட கார்களில் வந்த 3 பேரை விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.

 

அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் 3 பேரும் கேரளாவை சேர்ந்த தாமஸ், முரளி தரண், மற்றும் அலியார் ஆகியோர் என்பதும் போலீசார் போல் வேடம் அணிந்து மூன்றரை கோடி ரூபாயை கொள்ளை அடித்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 31 லட்சம் ரூபாய் மற்றும் 3 சொகுசு கார்கள், 1 இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Leave a Reply