ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஜோலார் பேட்டையில் உள்ள ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் தரை தொட்டியில் இருந்து பார்சல் பேட்டை ரயில் நிறுத்தம் வரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணி நிறைவுற்று வெள்ளோட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டு சாலையில் அருகே அமைக்கப்பட்டு இருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனிடையே வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை பெரிய இரும்பு குழாய்கள் மூலம் கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்வதற்கு பெரிய குழாய்களுடன் இணைக்கும் பணிகளுக்கு 90 சதவீதம் முடிவடைந்து உள்ளன. புதன் கிழமை இரவுக்குள் 100 சதவீத பணிகள் நிறைவு பெற்று ஓரிரு தினங்களில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.