கருணை கொலை செய்யக்கோரி இலங்கை தமிழர்கள் ஆட்சியரிடம் மனு

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விடுதலை செய்யாததால் தங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று இலங்கை அகதிகள் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கன்னியாகுமாரி துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு கள்ளத்தோணியில் தப்பி செல்ல முயன்றதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை அகதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உட்பட 19 பேரை குயு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

இதனை அடுத்து அவர்கள் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சென்னை புழல், வேலூர்,திருச்சி உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாயகி 19 பேரையும் விடுதலை செய்வதாக கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவித்தார். ஆனால் அவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.

 

இந்நிலையில் திருச்சி மத்திய சிறை, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் இலங்கை தமிழர்களான அருள், குணசீலன், யோககுமார் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாகவும், எனவே தங்களை கருணை கொலை செய்ய உத்தரவிட கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.


Leave a Reply