காஞ்சிபுரத்தில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு! ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை

காஞ்சிபுரம் வரதராஜ் பெருமாள் கோவிலில் புகைப்படம் எடுக்க முயன்றவரை போலீஸ் தாக்கியதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் உயிர் இழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த நாராயண ரெட்டி, நாகேஸ்வரி தம்பதிகள் காஞ்சிபுரம் வந்து இருந்தனர். இவர்களது மகன் ஆகாஷ் கோவிலில் உள்ள சன்னிதியில் புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

 

அப்போது அதனை தடுக்க முற்பட்ட பெண் ஆய்வாளர் தாக்கியதில் ஆகாஷ் மயக்கமடைந்து விட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகாஷ் உயிரிழப்பிற்கு போலீஸ் கெடுபிடியே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே உயிரிழப்பிற்கு காரணமான பெண் ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அத்திவரதர் திருவிழா நடைபெற்று வரும் வேளையில் காஞ்சிபுரத்தில் காவல் துறையினரின் தொடர் கெடுபிடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்காக நகரத்திற்கு வர அந்த மாவட்டத்தில் வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு அனுமதி சீட்டு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு உள்ளது. இதில் மினி பேருந்துகளுக்கு சிறப்பு அனுமதியும், ஆட்டோகளுக்கு பாரபட்சமும் காட்டப்பட்டு வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

மாவட்ட நிர்வாகத்தால் வழங்கபட்ட சிறப்பு அனுமதிசீட்டு இருந்தும் போலீஸ் கெடுபிடியால் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply