சிம்டிஏ- வில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் மூத்த அதிகாரியின் பாலியல் தொல்லையால் பெண் ஊழியர் ராஜினாமா செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றி வரும் மூத்த திட்ட அதிகாரி ஒருவர் அங்கே பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமது ஆசைக்கு இணங்குமாறும், அவ்வாறு இணங்கினால் பலன் அடையலாம் என்றும் அந்த பெண் ஊழியருக்கு மூத்த அதிகாரி வாட்ஸ் ஆப் குறுந்தகவல் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தமது வேலையை ராஜினாமா செய்துள்ளார். ஊடகம் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்து கொண்டது.

 

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் குழு அமைக்கபட்டுள்ளதா என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிகுழும உறுப்பினர் விசாரணை நடத்தினாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள மாநில மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக தமிழக வீட்டு வசதி துறை செயலாளர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர், செயலர் ஆகியோர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply