சத்தியமங்கலம் – சாம்ராஜ்யநகர் ரயில் பாதை திட்டம் ?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அண்டை மாநிலமான கர்நாடகா செல்லும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. அடர்ந்த வனப்பகுதியில் கொண்டை ஊசி வளைவுகளில் சிரமப்பட்டு பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சத்தியமங்கலம் – சாம்ராஜ்யநகர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

 

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் ரயில் நிலையத்திலிருந்து சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதி வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்யநகர் ரயில் நிலையம் வரை 156 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளது இந்த திட்டம். கடந்த 2003 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரயில்வே பட்ஜட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு பணிகளை தொடங்க சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் அப்போதைய மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக இருந்த இ‌வி‌கே‌எஸ் இளங்கோவன், ரயில்வே இணை அமைச்சராக இருந்தவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

 

ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை என்று ஈரோடு மாவட்ட மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளனர். மொத்த ரயில் பாதையில் 58 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி என்பதால் மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வனப்பகுதியில் ஆய்வு செய்யவும் அனுமதி மறுத்தது. இதனால் இத்திட்டத்தை தென்னக ரயில்வே நிர்வாகம் கைவிட்டது.என்றாலும் தற்போது மத்திய மாநில அரசுகள் மீண்டும் இத்திட்டத்தை வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் , இரும்பு தூண் பாலங்கள் அமைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட அரசியல் தலைவர்களும், வணிகர்களும் பலமுறை ரயில்வே அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜட்டில் சத்தியமங்கலம் – சாம்ராஜ்யநகர் ரயில்வே திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Leave a Reply