தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிட்டும் கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா கடந்த 2016-ஆம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது.
அதன்படி அனைத்து திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் வர்த்தக நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால்,கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான காந்திபுரம், இரயில் நிலையம்,பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் கடைகள் 24 மணி நேரம் திறக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என கோவை மாநகர வியாபாரிகள் சம்மேளனத்தினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும்,கடைகள் தமிழக அரசு அரசாணைப்படி 24 மணி நேரமும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்ற மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு வியாபாரிகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.