ராகுல் காந்தி ராஜினாமாவிற்கு எதிராக போராடும் தொண்டர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட கோரி போராட்டம் நடத்தி வரும் அக்கட்சி தொண்டர்களுக்கு மூத்த தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து உள்ளனர். மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட பெற முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.

 

இதனால் அக்கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவு செய்தார். இந்த முடிவை கைவிடக்கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர் கூட்டாக ராகுல் காந்தியை சந்தித்து வலியுறுத்தினர். எனினும் தனது ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராகுல் காந்தி தன் முடிவை விடகோரி டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பாக அக்கட்சி தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் முடிவை கைவிட கோரி அக்கட்சி தொண்டர் ஒருவர் டெல்லி கட்சி தலைமை அலுவலகம் அருகே உள்ள மரத்தில் ஏறி தூக்கில் தொங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்நபரை தடுத்து நிறுத்தினர்.


Leave a Reply