திருநங்கைகள் என்பவர்கள் சாலை ஓரங்களில் கைதட்டி தானம் கேட்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் கடந்த 5 வருடங்களில் திருநங்கை சமூகத்தில் பல மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. காவல் துறை அதிகாரிகளாக, வழக்கறிஞர்களாக, செவிலியர்களாக, ஊடகம் மற்றும் திரைத்துறையில் ஜொலிப்பவர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.
சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் பெரி ஃபெர்ரி அமைப்பு “ equal opportunity for Transgender community “ என்ற குறிக்கோளை முன் வைத்து திருநங்கை சமூகத்தினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இது பற்றி பெரி ஃபெர்ரி அமைப்பின் ஆலோசகரான திரிஷாளா பகிர்ந்தார். திருநங்கை சமூகத்தினருக்காக பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால் வேலை வாய்ப்புகளோடு தொடர்புடைய எந்த கருத்தரங்கும் நிகழ்வதில்லை.
தங்கள் அமைப்பின் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தர முடிவு செய்ததாக கூறினார். முதற்கட்டமாக என்.ஜி.ஓ.க்களின் உதவியோடு நன்கு படித்த, வேலைக்கு செல்ல விரும்பும் திருநங்கைகளை அடையாளம் கண்டுள்ளனர். பல திருநங்கைகள் பாலியல் தொழிலிருந்து விடுபட்டு வேலைக்கு செல்ல விரும்பினார்கள். ஆனாலும் அலுவலக சூழல் அவர்களை புறக்கணித்து விடுமோ என்கிற அச்சம் அவர்களுக்குள் இருந்துள்ளது.
அவர்களுடைய அச்சத்தை போக்க பல பயிற்சி வகுப்புகளை நடத்தினோம். மெல்ல மெல்ல அவர்கள் தன்னம்பிக்கையோடு அலுவலகம் செல்ல தயாரானார்கள். திருநங்கைகளுக்கு மட்டுமில்லாமல், அலுவலகத்தில் உள்ளவர்களிடமும் கலந்துரையாடி திருநங்கைகள் மீதான புரிதலை உண்டு பண்ணினோம். ஐடிு நிறுவனங்களில் ஹெச். ஆர் தொடங்கி அட்மின், மேனேஜர் , செஃப், ஹவுஸ் கீப்பிங் போன்ற பணிகள் வரை திறம்பட வேலை பார்க்கிறார்கள். தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 85க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பல்வேறு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு அது குறித்து ஆலோசனைகளும் நிதி உதவியும் கொடுத்து வருவதாக தெரிவித்தனர்.இனி வெளியூரிலிருந்து வாழ்வாதாரத்திற்காக சென்னை நோக்கி வரும் இளம் திருநங்கைகள் தவறான வழிக்கு செல்லாமல் இருப்பதற்காக குடியிருப்பு வசதி மற்றும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இறைவன் படைப்பில் நாம் அனைவரும் சமம்.