நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரை

Publish by: --- Photo :


அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பரிந்துரை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களும் முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வகையில் தமது தலைமையில் வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் அனைவரது பங்கேற்பையும் தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

 

இது மட்டுமின்றி 2022 இல் கொண்டாடப்பட உள்ள சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு தினம், மற்றும் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள மகாத்மா காந்தி அடிகளின் 150 ஆம் ஆண்டு பிறந்த தினம் குறித்து விவாதிக்கவும், அனைத்து கட்சி தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்து இருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு புதியவர்கள் வருகை மூலம் புதிய சிந்தனை பிறப்பெடுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். பிரதமரின் இந்த அழைப்பை  உறுதிப்படுத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி இதே தலைப்புகள் குறித்து வருகிற 20 ஆம் தேதி எம்.பி.க்களுடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாக பிரதமர் தெரிவித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

நாட்டில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனை, நாடு முழுவதும் காணப்படும் வறட்சி உள்ளிட்ட மக்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டுமென அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Leave a Reply