மீண்டும் மோடி சர்க்கார்…வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

Publish by: நமது சிறப்பு நிருபர் --- Photo : கோப்பு படம்


மக்களவையில் பாஜக 303 இடங்களை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

 

அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 62 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. மராட்டியத்தில் 28 தொகுதிகளை வென்ற பாரதிய ஜனதா குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. ராஜஸ்தானில் 24 தொகுதிகளையும், மம்தா ஆட்சிபுரியும் மேற்குவங்கத்தில் 19 தொகுதிகளையும், பாரதிய ஜனதா தன்வசமாக்கிக் இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 303 தொகுதிகளை வென்று வலிமை மிக்க தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளதால், இந்தியா முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜவகர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பின் பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருக்கிறார்.வாரணாசி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாபெரும் வெற்றியுடன் கட்சி தலைமைக்கு வந்த மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய மோடி, பாஜக கிடைத்த வெற்றி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என பெருமையாக கூறினார்.

 

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வருகிற 26-ம் தேதி பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து 25 ம் தேதி பாரதிய ஜனதா எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மோடி முறைப்படி மக்களவை பாரதிய ஜனதா கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்ற மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், மோடிக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார் மேலும் மோடி இரு நாட்டு உறவில் புதிய உயரத்தை எட்ட உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அனுப்பியுள்ள செய்தியில், தெற்கு ஆசியாவில் அமைதி, வளர்ச்சி உருவாக இணைந்து பாடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இரு தரப்பு உறவுகள் மேலும் மேம்படுவதற்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Reply