விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி சார்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முதலே சிதம்பரம் தொகுதியில் இழுபறி நீடித்து வந்தது.
இதன் காரணமாக சிதம்பரம் தொகுதி தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 3,519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் பேட்டியளித்த திருமாவளவன், பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு வெற்றி பெற்றாலும், தமிழகம் மற்றும் கேரளாவிலும் அவர்களின் ஜம்பம் எடுபடவில்லை. ஜாதி வெறியர்களுக்கும் மதவெறியர்களுக்கும் இங்கே இடம் இல்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
எத்தனையோ அவதூறு பிரச்சாரங்கள் இந்த அணிக்கு எதிராக அவர்கள் முன்னெடுத்து பார்த்தார்கள். குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் என்னை வெல்வதற்கு,ரூ 50 கோடியிலிருந்து 100 கோடிக்கு மேலாக அங்கே கொட்டி இறைத்தார்கள். அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். சாதி அரசியலை கூர்மை படுத்தினார்கள். அனைத்தையும் தாண்டி அனைத்து தரப்பு பொதுமக்களும் ,ஜனநாயக சக்திகளும் பேர் ஆதரவு நல்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
திமுக கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை நல்கி இருக்கிறது என்பதை இந்த தேர்தல் உணர்த்தி இருக்கிறது. அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.