அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து.. இருசக்கர வாகனத்தில் மோதி இளைஞர்கள் இருவர் பலி!

மேட்டுப்பாளையம் அருகே அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து மோதி டூவிலரில் வந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து அரசுப்பேருந்து ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.அதே நேரத்தில் கோவையில் இருந்து குன்னூர் நோக்கி டூவீலரில் இளைஞர்கள் இருவர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பிளாக் தண்டர் தீம் பார்க் அருகே சென்று கொண்டிருந்தனர்.அப்போது,திடீரென அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து பிளாக் தண்டர் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது சற்றும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இச்சம்பவத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர்.மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சென்று சடலங்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

காவல் துறையினரின் விசாரணையில் இறந்த ஒரு இளைஞரின் பெயர் பாலகிருஷ்ணன் என்றும்,குன்னூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்றும்,உடன் வந்த மற்றொரு இளைஞரின் பெயர்,விலாசம் குறித்த தகவல் தெரியவில்லை என தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து மோதி இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply