ஆபாச வார்த்தைகளால் அதிகாரி அர்ச்சனை! மயங்கி சரிந்த போலீஸ்காரரால் பிரச்சனை!!

Publish by: --- Photo :


கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனக்கோடி. இவரது தந்தை இறந்ததால் விடுமுறையில் சென்றிருந்த அவர், 40 நாட்கள் ஆன நிலையில் நேற்று பணிக்கு திரும்பியுள்ளார்.

 

தந்தை மறைந்த சோகத்தில் இருந்த தனக்கொடிக்கு, அங்கு மேலும் சோதனை காத்திருந்தது. காவல் ஆய்வாளர் தர்மராஜ், தனக்கோடியை தரக்குறைவான வார்த்தைகளால் ஆபாசமாக பேசியதாகவும், கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

ஆறுதல் கூறி தேற்ற வேண்டிய நேரத்தில், இப்படி அசிங்கமாக திட்டுகிறாரே என்று தனக்கொடி நொந்து போனார். இதனால் அவரது ரத்த அழுத்தம் தாறுமாறாக எகிறியுள்ளது. சிறிது நேரத்தில் அதிக ரத்த அழுத்தத்தால், காவலர் தனக்கோடி காவல் நிலையத்திலேயே மயங்கி சரிந்தார்.

 

பணியில் இருந்த இரு பெண் காவலர்கள் இதை பார்த்து பதறினர்; அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, அவருக்கு டீ வாங்கி கொடுத்து மருத்துவமனைக்கு செல்லும்படி அவரை அறிவுறுத்தியுள்ளனர். காவலர் தனக்கோடி தற்போது கோவை காவலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே, இரவு பகல் பார்க்காமல் சட்ட ஒழுங்கு பாதுகாப்புக்காக காவலர்கள் கால வரம்பற்ற பணியாற்றி பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், கோவையில் காவல் உயர் அதிகாரியின் தரக்குறைவான பேச்சால், காவலர் ஒருவர் பாதிக்கப்பட்ட சம்பவம், கோவை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து கருத்தை அறிய, ‘குற்றம் குற்றமே’ இதழ் நிருபர், காவல் ஆய்வாளர் தர்மராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி எதுவும் தெரியவில்லை. நான் தேர்தல் பணியில் இருக்கிறேன் என்று கூறி, கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.