சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் பூத் சிலிப் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக்கூறி, கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், அங்கு பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நெருங்குவதால், தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை தொட்டிருக்கிறது. இங்கு திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியும், அதிமுக சார்பில் கந்தசாமியும் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில், குறுக்கு வழிகளில் ஈடுபடுவதாக இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றன. இதனால், இப்போதே தொகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
இடையர்பாளையம் பகுதியில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலர் (தண்டல்காரர்) தங்கவேல், தற்போது பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் . அவரை, அதிமுகவினர் சிலர் மடக்கி, மிரட்டி பூத் சிலிப்புகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் பாலு என்ற பாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆறுமுகம் ஆகியோர், கிராம நிர்வாக உதவி அலுவலர் தங்கவேலுவை மிரட்டியதாக, எதிர் தரப்பினர் கூறுகின்றனர். அப்படி பறித்து சென்ற பூத் சிலிப்புகளில் அதிமுகவினருடையது மட்டும் தான் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதை அறிந்து திமுகவினர் ஆவேசம் அடைந்தனர். அப்பகுதி திமுக தேர்தல் பொறுப்பாளரும், மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், அறிவரசு மற்றும் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்டோர், கிராம நிர்வாக உதவி அலுவலர் தங்கவேலை சிறைப்பிடித்து, தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து, அங்கு திரண்ட அதிமுகவினர் கிராம நிர்வாக அலுவலரை வெளியே விடவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால், அங்கு மோதல் உருவாகும் சூழல்நிலை ஏற்பட்டது. அங்கு விரைந்த காவல்துறை டிஎஸ்பி பாஸ்கரன், அங்கு வந்து சமாதானம் பேச முற்பட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இத்தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்; சிறைப்பிடித்த கிராம நிர்வாக உதவி அலுவலரை, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.