3வது அணி பற்றி மே 23ஆம் தேதிக்கு பிறகே தெரியும்! சந்திரசேகரராவ் சந்திப்பு பற்றி ஸ்டாலின் பேட்டி

தேசிய அளவில் மூன்றாவது அணி அமையுமா என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

தெலுங்கானா ராஷ்ட்ரீட சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகரராவ், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பல்வேறு தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்.

 

அவ்வகையில், சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேற்றுமாலை, சந்திரசேகரராவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இது குறித்து, மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மூன்றாவது அணியை உருவாக்கும் நோக்கில் தற்போது வரவில்லை. சந்திரசேகரராவ் ஆலயங்களுக்கு செல்லவே தமிழகம் வந்தார். அவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

 

தற்போது நாட்டில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் மூன்றாவது அணி அமையுமா என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடும்” என்றார்.

 

மூன்றாவது அணிக்கு தற்போது அவசியம் எழவில்லை; தேர்தல் முடிவுக்கு பிறகு தெரியும் என்ற ஸ்டாலினின் பதிலை பார்க்கும் போது, தேர்தல் முடிவை பொருத்து திமுகவின் நிலைப்பாடு மாறக்கூடும் என்று, அவர் சூசகமாக தெரிவித்திருப்பதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply