இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமலஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும், ஆதரவும் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக அவரது வீடு, அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில், மக்கள் நீதிமய்யம் வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம், அதன் தலைவர் கமலஹாசன் வாக்கு சேகரித்தார். அங்கு சிறுபான்மையினர் வாழும் பகுதியில் அவர் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான். முஸ்லீம்கள் இங்கு அதிகம் இருப்பதான் நான் அப்படி பேசவில்லை என்றார்.
அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஹெச். ராஜா, சுப்ரமணியன் சுவாமி, ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். கமலஹாசனின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் தி.க. தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட சிலர், கமலஹாசன் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் கமலுக்கு ஆதரவாகவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசனின் வீடு, மக்கள் நீதிமய்யம் கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து தீவிரவாதி என்ற விவகாரத்தில் உருவாகியுள்ள சூழல் கருதி, தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.