வடகொரிய கப்பலை மடக்கிய அமெரிக்கா! மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே ‘டென்ஷன்’!!

சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி, வட கொரியாவின் சரக்கு கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதால், இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

அணு ஆயுத சோதனைகளை வட கொரியா கைவிடவேண்டும் என்று, அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அதற்கு பரிகாரமாக, தங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தி வருகிறது.

 

இவ்விவகாரம் தொடர்பாக, பிப்ரவரி மாதம் வியட்நாமில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் – அமெரிக்க ஜனாதிபதி டிரம் இருவரும் சந்தித்து பேசினர். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை.

 

இதற்கிடையே, கடந்த 4ஆம் தேதி, ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது, அமெரிக்காவை ஆத்திரமடைய செய்துள்ளது. அதற்குள்ளாக, நேற்று முன்தினம் மீண்டும் 2 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது.

 

இந்நிலையில், சர்வதேச தடைகளை மீறியதாக கூறி, வடகொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா தடுத்து நிறுத்தி, கைப்பற்றி உள்ளது. இதில் வடகொரியாவுக்கான நிலக்கரி உள்ளது. வைஸ் ஹானஸ்ட் என பெயர் கொண்ட இக்கப்பல், சர்வதேச போக்குவரத்து விதிகளை மீறியதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவில் சிக்கியது.

 

அதன் அடிப்படையில் இந்தோனேசியா தற்போது வடகொரியாவின் வைஸ் ஹானஸ்ட் சரக்கு கப்பலை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளதாகவும், வடகொரியாவின் தற்போதைய ஏவுகணை சோதனைக்கும், இக்கப்பலை கைப்பற்றியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

எனினும், வட கொரிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதால், இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


Leave a Reply