கஜா புயலின் போது தமிழகத்திற்கு வந்து பார்வையிடவில்லை என்று மோடி மீது விமர்சனம் உள்ள நிலையில், ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை, ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
ஃபனி புயல், கடந்த 10ஆம் தேதி, ஒடிசாவை துவம்சம் செய்து, கரையை கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது; ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன; மின் கம்பங்கள் சாய்ந்தன. ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள் இன்னமும் வெள்ளக்காடாகவே உள்ளன. புயலுக்கு இதுவரை ஒடிசாவில் மட்டும், 34 பேர் இறந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர், மின்சாரம், அடிப்படை தேவைகளின்றி திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தை, ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். அவருடன் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் , மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர்.
புயல் பாதிப்புகள், ஏற்பட்டுள்ள சேதத்தின் உத்தேச மதிப்பீடு, தேவைப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து ஒடிசா முதல்வருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். தமிழத்தில் கஜா புயலின் போது சேதங்களை பார்வையிட, பிரதமர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஒடிசாவில் அவர் ஆய்வு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.