பொறியியல் படிப்பில் சேர, இன்று முதல் ஆன் -லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள், இம்மாதம் 31ஆம் தேதியாகும்.
வரும் 2019-20-ம் கல்வியாண்டில், முதலாம் ஆண்டு பிஇ, பி.டெக். பட்டப்படிப்பில் சேர, இணையதளம் வாயிலாக, இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு, www.tneaonline.in, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம், இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதள வசதி இல்லாதவர்களுக்காக, தமிழ்நாடு முழுவதும், 42 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். அல்லது, ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை’ என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து சேவை மையங்களில் அளிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது, அருகில் உள்ள சேவை மையம் ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டும். காரணம், அந்த சேவை மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.
விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விண்ணப்பம் பதிவு செய்வதற்கு, கீழ்கண்ட விவரங்கள் தயார்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். இணையதள முகவரிக்கு உள்ளே சென்றதும் மாணவர்கள் உள்நுழைவு ஐ.டி. மற்றும் கடவுச்சொல் உருவாக்கிக்கொள்ள வேண்டும். தங்கள் பெயர், ஊர், முகவரி, கல்வி நிலை விவரம் (8 முதல் 12-ம் வகுப்பு வரை), பெற்றோர் பற்றிய விவரம் பதிவுவிட வேண்டும். மாணவர்களுக்கு மொபைல்போன் எண், மின்னஞ்சல் முகவரி அவசியம். அவற்றிற்கு தான் ரேண்டம் எண், தரவரிசை பட்டியல், கலந்தாய்வு நாள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.
தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டியதில்லை. பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் அவசியம். விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய தனிச்சான்று அவசியம்.
பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500; எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250 விண்ணப்ப கட்டணமாகும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 6 முதல் 11 வரை 42 சேவை மையங்களில் மட்டுமே நடைபெறும். ஜூன் 17இல் தரவரிசை பட்டியல் www.tneaonline.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப்பிரிவு மாணவர்கள் நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வழி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இது குறித்த மேலும் தகவல்கள், சந்தேகங்களுக்கு, 044 – 22351014, 044 – 22351015 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.