மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதே ஸ்டாலின் வேலை! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி காட்டம்

அதிமுக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தடுப்பது தான் திமுக தலைவர் ஸ்டாலின் வேலையாக இருக்கிறது என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

 

கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜல்லிப்பட்டி, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, சூலூர் உள்ளிட்ட 6 இடங்களில் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

 

சூலூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் வேனில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

 

மகாராஷ்டிராவில் உயிரிழந்த கமாண்டோ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன். இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசு மீது குற்றம்சுமத்துகிறார். ஆனால், மக்களுக்கான நல்ல திட்டங்களை தடுப்பதே அவரது வேலையாக இருக்கிறது.

 

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, தேர்தலுக்கு முன்பே தமிழகம் முழுவதும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. என்னை தலைவனாக பார்க்காமல், ஒரு தொண்டனாகவே கருதுகிறேன். காவிரி-கோதாவரி நதிநீர் திட்டம், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

 

நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்தவர். அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சியில் கடும் மின்வெட்டு நிலவி வந்தது. அதை மக்கள் மறக்கவில்லை. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம் என்று பேசினார்.


Leave a Reply