ஓ.பி.எஸ்.க்கு ஆளுநர் பதவி… மகனுக்கு மந்திரி பதவி? உண்மையை போட்டுடைத்த துணை முதல்வர்!

பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக கூறுவது முட்டாள்தனமானது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆவேசத்துடன் மறுத்துள்ளார்.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், பா.ஜ.க. தலைவர்களுடன் எப்போதுமே நெருக்கம் காட்டி வருபவர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடும் போது பா.ஜ.க. தலைவர்கள் அதிகம் பேரை, ஓ.பி.எஸ்.க்கு நன்கு தெரியும்.

 

சில தினங்களுக்கு முன்பு, வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கலின் போது, தனது மகன் ரவீந்திரநாத்தையும் அழைத்து சென்று கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற ஆலோசனிய கூட்டத்திலும் ஓ.பி.எஸ். பங்கேற்றார். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒருவித ஆச்சரியத்தை தந்தது.

 

 

இது குறித்து, அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன் கருத்து தெரிவிக்கையில், விரைவில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதாவில் இணைவார்; அவரது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி, அவருக்கு ஆளுநர் பதவியை கேட்டிருப்பார் என்று, கொளுத்திப் போட்டார். இது அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை உண்டுபண்ணியது.

 

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று செய்தியாளர்களுக்கு ஓ.பி.எஸ். அளித்த பேட்டியில், தர்மயுத்தம் தொடங்கிய போதிருந்து தங்கத் தமிழ்ச்செல்வன் கருத்துக்கு பதில் கூறக்கூடாது என்றிருந்தேன். நான் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக தற்போது அவர் கூறியிருப்பது முற்றிலும் முட்டாள்தனமானது என்று ஆவேசமாக பதில் அளித்தார்.


Leave a Reply