மேற்கு வங்கத்தில் நடந்த பிரசாரத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசியது, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசார கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், மே 23ஆம் தேதி தேர்தல் முடிவு வரும்போது, தாமரை எல்லா இடங்களிலும் மலரும். உங்கள் (திரிணமூல் காங்கிரஸ்) எம்.எல்.ஏ.க்கள் உங்களை விட்டு விலகி விடுவர் என்றார்.
அத்துடன் நிற்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர், தற்போது வரை எங்களுடன் (பா.ஜ.க.) தொடர்பில் இருப்பதாகவும் கூறி, அக்கட்சிக்கு ஷாக் கொடுத்தார். இது, திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் பேச்சை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது; எம்.எல்.ஏ. சிலரை தன் பக்கம் இழுத்து ஆட்சிக்கு நெருக்கடி தர அவர் திட்டமிட்டிருக்கலாம் என்று மம்தா கருதுவதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். மேலும், பா.ஜ.க.வை அதிகம் விமர்சிக்காத எம்.எல்.ஏ.க்கள் மீது ஒரு பார்வை இருக்கட்டும் என்று கூறியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, மோடி மீது புகார் அளிக்கவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி. தெரீக் ஓ பிரையன் நிருபர்களிடம் கூறுகையில், காலாவதியான பிரதமரின் கட்சியுடன், ஒருவரும் சேரப்போவதில்லை. ஒரு கவுன்சிலர் கூட உங்களுடன் வரப்போவதில்லை. உங்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளிக்க உள்ளோம் என்றார்.