மதுரை கலெக்டரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு! அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த வழக்கில் அதிரடி!!

மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள், வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த விவகாரத்தில், ஆட்சியர் நடராஜனை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்குள் உரிய அனுமதியின்றி நுழைந்த வட்டாட்சியர் சம்பூர்ணம், சுமார் 2 மணி நேரம் அங்கிருந்து, ஆவணங்களை நகல் எடுத்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பூர்ணம் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். அதில், மத்திய தேர்தல் ஆணையம் குழு அமைத்து விசாரிக்க கோரியிருந்தார்.

 

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும்,துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் இடமாற்றம் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இதை தொடர்ந்து, ஆட்சியர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நாகராஜ் மற்றும் சந்தானகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Leave a Reply