ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர், உறவினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இதற்கிடையே, நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கேட்டும், 21 மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

ஆனால், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க, உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 90 சதவீத விசாரணை முடிவடைந்து விட்டதால், இனி 21 மருத்துவர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

 

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், அப்பல்லோ தரப்பு கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Leave a Reply