எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது தான் என்று, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
கத்தார் தலை நகர் தோகாவில் நடந்த தடகளம் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தில், மிக ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இன்று தனது விடா முயற்சியால் மகுடம் சூடியுள்ளார். தங்கப்பதக்கம் வென்றது குறித்து கோமதி தெரிவித்ததாவது:
எனக்கு என் அப்பா தான் எல்லாமே. அவருக்கு உடல்நிலை இல்லாத போதும் மருத்துவம் பார்க்க வைத்திருந்த காசை என் விளையாட்டுக்கு செலவிட்டார். நான் ஜெயித்ததை பார்க்க அப்பா இல்லை என்பது வருத்தம். அவர் இதை பார்த்திருந்தால், அவ்வளவு சந்தோஷம் அடைந்திருப்பார்.
எனது அடுத்த இலக்கு, ஒலிம்பிக் போட்டிற்கு தகுதி பெறுவது தான். அடுத்ததாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளேன். இதில், 1 நிமிடம் 59விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை படைக்க விருப்பப்படுகிறேன்.
தற்போது தங்கப் பதக்கம்வென்றதால் என்னுடைய சிறிய ஊரான முடிகண்டம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இது பெருமையாக உள்ளது. தங்கம் வெல்ல வேண்டும் என்ற என்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறியது என்றார்.