தமிழகத்தில் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவு! மக்களின் ஆர்வம் குறைந்ததன் பின்னணி இதுதான்

தமிழகத்தில் நேற்று நடந்த மக்களவை தேர்தலில் சராசரியாக 70.90 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது கடந்த முறையைவிட குறைவு.
தமிழகத்தில், வேலூர் மக்களவை தொகுதியை தவிர 38 தொகுதிகளுக்கும்; 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் அங்குள்ள தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும்,  நேற்று வாக்குப் பதிவு நடந்தது.
தமிழகத்தில் நேற்றைய தேர்தலில் சுயேச்சைகள் உட்பட, 822 பேர் போட்டியிட்டனர். 18 சட்டசபை தொகுதிகளில் 269 பேர் களத்தில் இருந்தனர். இவர்களுக்கென  67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  ஒரு சில அசம்பாவித சம்பவங்களை தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிந்தது. சித்திரை திருவிழா காரணமாக, மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. அதன்பின், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழகத்தில்  நேற்று, 70.90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். அதிகபட்சமாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 79.75 சதவீத வாக்குகள்; குறைந்தபட்சமாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 57.43 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சராசரியாக 73.68 சதவீத வாக்குகள் பதிவாயின. அதனுடன் ஒப்பிடும் போது இம்முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எனினும் வாக்குப்பதிவு குறைந்ததற்கு, தமிழகத்தில்  இம்முறை நிர்ணயிக்கப்பட்ட தேதியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நாளில் பல இடங்களில் சித்திரை திருவிழா மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளன.  அதேபோல், வாக்குப்பதிவு செய்ய சொந்த ஊருக்கு செல்வோருக்கு  போதிய போக்குவரத்து வசதிகள் கிடைக்கவில்லை. பஸ்கள் கிடைக்காமல், பலரும் அவதிப்பட்டனர்.
நாடு முழுவதுமாக்  நேற்று நடந்த 95 தொகுதிகளில் 66 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது. இதுவும், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவு.  3ஆம்  கட்ட தேர்தல்,  15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது.

Leave a Reply