தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் ! பச்சை பட்டு உடுத்தியதால் என்ன நடக்கும் தெரியுமா?

Publish by: --- Photo :


சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, இன்று காலை பச்சை பட்டு உடுத்தி தங்க்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை விழா நடைபெற்று வருகிறது.  அதேபோல், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும், இவ்விழாவுடன் சேர்த்து நடத்தி, சைவமும், வைணமும் இணைந்த பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 17 ஆம் தேதி நடந்தது.  18ஆம் தேதி தேரோட்டமும், இன்று தீர்த்தவாரியும் நடக்கிறது.
இந்நிலையில், வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு, தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரைக்கு புறப்பட்டார்.  பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த தோல் பைகளில் நிரப்பி இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர்.
மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகருக்கு பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் முன் விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து இரவு 7 மணியளவில் மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி மதுரையை நோக்கி புறப்பட்டார்.
இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி தங்கக்குதிரை  வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்பே, வைகை ஆற்றுக்கு வீரராகவப்பெருமாள் வந்து, அவரை வரவேற்றார். ஆற்றில் இறங்கிய கள்ளழகர் காலை 7.25 மணி வரை அங்கேயே இருந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இவ்விழாவில், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பக்தர்கள் குவிந்தனர்.  லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கியுள்ளார். இதனால் நாட்டில் பசுமை பரப்பு அதிகரித்து சுபீட்சம் பெறும் என்று பொருள் கொள்ளலாம் என்று, ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply