நடிகை சந்தியாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்!

பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பிரசன்னகுமாரி. இந்த தம்பதியின் மகள் சந்தியா (வயது 35).

தூத்துக்குடியை சேர்ந்தவர் சினிமா இயக்குனர் பால கிருஷ்ணன் (51). இவருக்கும் சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சென்னை ஜாபர்கான் பேட்டையில் கணவருடன் சந்தியா வசித்து வந்தார். சினிமாவிலும் சந்தியா துணை நடிகையாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் சந்தியா திடீரென்று மாயமானார். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அவரை கணவர் பாலகிருஷ்ணன் கொடூரமான முறையில் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் சந்தியாவின் உடல் பாகங்களை சென்னையின் பல இடங்களில் அவர் வீசி உள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சந்தியாவை பாலகிருஷ்ணன் கொவை செய்தார். சந்தியாவின் 2 கால், ஒரு கை ஆகியவை பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்தும், இடுப்பு முதல் தொடை பகுதி வரை ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் இருந்தும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சந்தியாவின் தலை மற்றும் சில உடல் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

சந்தியாவின் உடல் பாகங்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் பாதுகாப்பாக வைத்திருந்தனர். மகள் சந்தியாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காக அவரது உடல் பாகங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் பள்ளிக்கரனை போலீசில் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று சந்தியாவின் உடல் பாகங்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சந்தியாவின் உடலை இன்று காலை 11.15 மணி அளவில் ஞாலத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். அதன்பிறகு சந்தியாவின் உடல் ஞாலம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.


Leave a Reply