மாயமான சிறுமி கொலை – கை, கால் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுமி நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்த அவர் விளையாடுவதற்காக வெளியே சென்றார்.

ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்தனர்.

இந்தநிலையில் இன்று காலை இவர்களது வீட்டின் அருகே உள்ள சந்தில் சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Reply