தொழிலதிபர்களை சிக்க வைத்து ஆபாசப்படம் எடுத்த இளம்பெண்கள்..!

இளம்பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த பேரதிர்ச்சி வெளியாகி உள்ளது. தொழிலதிபர்களுக்கு வலைவிரித்து அவர்களை ரகசியமாக ஆபாச படம் எடுத்த இரு இளம்பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில், இளம்பெண்களை வீடியோக்களை எடுத்து மிரட்டிய கொடூர அதிர்ச்சி மறைவைதற்குள், வேலூர், வாணியம்பாடியில் இரு இளம்பெண்கள் தொழிலதிபர்களை மிரட்டிய சம்பவம் அரங்கேற்றியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்தவர் தொழிலதிபரான அப்துல் ரப் ஆரிப். இவரது தாயார் வேலுார் மாவட்டம், ஆம்பூரில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவரை பராமரித்துக் கொள்ள உதவியாளர் தேவை என ஆரிப், விளம்பரம் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த வாணியம்பாடியை சேர்ந்த ஆபிதா என்கிற இளம்பெண் ஆரிப்பை அழைத்துள்ளார். தங்களிடம் உதவியாளர் இருப்பதாகவும், அவரை நேரில் பார்த்து அழைத்துச் செல்லுவதற்காக வாணியம்பாடி வருமாறும் கூறியுள்ளார். அதன்படிஆரிப், வாணியம்பாடி சென்றுள்ளார்.


அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற கும்பல் ஒரு வீட்டிற்குள் தள்ளியது. அங்கு 10 பேர் கொண்ட கும்பல் ஆரிப்பின் ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணமாக்கி உள்ளது. அரைகுறை ஆடையில் இருந்த ஒரு பெண் ஆரிப் அருகில் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் போட்டோவைக் காண்பித்து, ஆரிப்பிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பறித்துக் கொண்டு விரட்டி அடித்துள்ளனர்.

தப்பி வந்த ஆரிப் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வாணியம்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், ஆபிதா, தாரா என்ற 2 பெண்கள், ஷாபுதின், நதீம், கோவிந்தராஜ், மனோஜ், அசேன், . சதாம் உசேன், இப்ராஹிம், அஸ்லம், சாது என்ற 9 நபர்கள் என மொத்தம் 11 பேர் சிக்கினர்.

இந்தக் கும்பல் அளித்துள்ள வாக்குமூலத்தில், வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய தொழிலதிபர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களைக் குறிவைத்து பணம் பறிப்பதை அந்தக் கும்பல் வேலையாகக் கொண்டுள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் வீட்டு வேலைகள் அல்லது நபர்களைக் கவனித்துக் கொள்வதற்கு நாளிதழ்களில் விளம்பரம் அளிப்பார்கள் அல்லது தங்களுக்குத் தெரிந்த நபர்களிடம் சொல்லி வேலையாட்களை ஏற்பாடு செய்யும்படி கூறுவார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தக் கும்பல் அந்தத் தொழிலதிபர்களைத் தொடர்பு கொள்வார்கள்.

பின்னர் வாணியம்பாடியில் குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி தாங்கள் குறிவைத்த தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அதை நம்பிய தொழிலதிபர்களும் குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது அவரிடம் ஆபிதா அல்லது தாரா அறிமுகமாகி நெருங்கிப் பழக ஆரம்பிப்பார்கள். இதில் சபல புத்தியுள்ள தொழிலதிபர்கள் இந்தப் பெண்களின் மாயவலையில் விழுந்து விடுகின்றனர். இந்தப் பெண்களும் நெருக்கமாக இருப்பது போல நடிக்கத் தொடங்குவார்கள்.

அதன் பின்னர் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அந்தக் காட்சிகளை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்துவிடுவார்கள். பின்னர் அந்த வீடியோ மற்றும் படங்களைக் காட்டி தொழிலதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தைப் பறிக்கத் தொடங்கிவார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் இப்படி பல தொழிலதிபர்கள் இந்தக் கும்பலிடம் லட்சக்கணக்கில் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மானத்திற்கு அஞ்சி பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரை அணுகாததால் இந்தக் கும்பலின் அட்டகாசம் இதுவரை வெளியில் தெரியவில்லை.

ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன்பே இதுகுறித்து போலீசாருக்கு புகாரளிக்கப்பட்டதாகவும், போலீசார் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், விரைவில் அவர்களை காவல் விசாரணையில் எடுத்து விசாரித்தால் வாணியம்பாடியில் இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவரும்.


Leave a Reply