முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேட்புமனு தாக்கல்!

கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன.

இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதே தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பதவி வகிக்கும் முட்டாஹனுமேகவுடாவும் காங்கிரஸ் வேட்பாளராக இங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னர், ஹஸ்ஸன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தேவேகவுடா அந்த தொகுதியை தனது பேரன் பிரஜ்வால் ரேவன்னா போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுத்தார்.

தொகுதி பங்கீட்டின்படி மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் கட்சியால் முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதிக்கு பதிலாக அக்கட்சியின் டெல்லி தலைமையிடம் பேசி தும்கூர் தொகுதியை தேவேகவுடாவுக்கு ஒதுக்குமாறு துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மூலம் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஏற்பாடு செய்தார்.
இதனால், தேவேகவுடாவுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட முட்டாஹனுமேகவுடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் எனக்கு இந்த தொகுதியில்தான் செல்வாக்கு அதிகம் என்று கூறி வீம்பாக தும்கூரில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் இருவரில் யார் வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள்? என்பது புரியாத நிலையில் தும்கூரு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் பசவராஜ் போட்டியிடுகிறார்.


Leave a Reply