ஐஎஸ்எல் 2019 சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு! கோட்டை விட்டது கோவா!!

மும்பை : மும்பையில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து 5 ஆவது சீசன் இறுதிப் போட்டியில் கோவா அணியை 1 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதிப் போட்டி மும்பையில் உள்ள அரினா அரங்கத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கும், எஃப்சி கோவா அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கோவா அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளுமே பிரமாதமாக ஆடின. ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மோர்டடா ஃபாலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. கோவா அணி வீரர்கள் இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ஆனாலும் முதல் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் டஃப் ஆகவே இருந்தது
ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மந்தர் ராவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சேவியர் காமா களம் இறக்கப்பட்டார். சரியாக 45 ஆவது நிமிடத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவுற்றது
இந்த முதல் பாதி ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கோவா அணிகள் 0 – 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 47 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் அகமதுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் பெங்களுரு அணியின் அல்ஜெட்ரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 62 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் அல்ஜெட்ரோ வெளியேற்றப்பட்டு லூயிஸ் லோபஸ் களம் இறக்கப்பட்டார். ஆட்டத்தின் 78 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது. இரண்டாவது பாதியின் முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. ஆட்டத்தின் 91 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் செரிடனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 103 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராகுல் பெக்கேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளிலுமே பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 117 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராகுல் பெக்கே அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ரசிகர்கள் அதை கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அடுத்து வந்த நான்கு நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், இறுதியில் பெங்களூரு அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தற்போது 5 ஆவது ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பெங்களுரு அணி சாம்பியன் பட்டதை வென்றது. இதுவே பெங்களூரு அணி வெல்லும் முதல் ஐஎஸ்எல் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply