இந்தியாவை விட கனடாவில் சீக்கிய எம்.பி.க்கள் அதிகம்…! பிரதமரை நிர்ணயிப்பதிலும் ‘கிங் மேக்கர்’ சீக்கியர் தான்..!!
கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் இந்திய வம்சாவளி சீக்கியர்கள் 18 பேர் எம்.பி.யாகி உள்ளனர். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் ஜக்மீத்சிங் என்ற சீக்கியரை தலைவராகக் கொண்ட கட்சியின் தயவில் தான் ட்ரூடோ மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கனடாவில் கடந்த திங்கட்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. 338 இடங்களைக் கொண்ட காமன்ஸ் சபைக்கு நடந்த தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஆண்ட்ரூ ஷூர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். நியூ டெமாக்ரடிக் பார்ட்டி என்ற கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜக்மீத்சிங் என்பவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். ஜக்மீத் சிங் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியராவார்.
கனடா மக்கள் தொகையில் 2% சதவீதம் பேர் சீக்கியர்கள் என்பதால், அந்நாட்டு அரசியலிலும் சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திங்கட்கிழமை தேர்தல் நடந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில், பிரதமர் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சி 157 இடங்களிலும், கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும், ஜக்மீத் சிங் தலைமையிலான நியூ டெமாக்ரடிக் பார்ட்டி 24 இடங்களையும் கைப்பற்றின. பிளாக் குருப்காஸ் என்ற கட்சி 3 2 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் லிபரல் கட்சி கூடுதல் (157) இடங்களை கைப்பற்றினாலும் மெஜாரிட்டி (170) இடங்களை பெறவில்லை. இதனால் ஐஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பிற கட்சிகளின் தயவை நாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இங்கு தான் நியூ டெமாக்ரடிக் பார்ட்டி கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் என்ற சீக்கியர், இப்போது கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.கனடா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் ஜக்மீத் சிங் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று உற்று நோக்கி வருகின்றன. ஜக்மீத் சிங்கும், தனது கட்சி எம்.பி.க்களை கலந்தாலோசித்து நல்ல முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனாலும் ஜஸ்டின் ட்ருடோவே மீண்டும் பிரதமராக ஆதரவளிப்பார் என்றே கூறப்படுகிறது.
கனடாவில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் மொத்தம் 18 இந்திய வம்சாவளி சீக்கியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் கட்சி சார்பில் 13 பேரும், கன்சர்வேடிவ் கட்சியில் 4 பேரும், நியூடெமாக்ரடிக் பார்ட்டி தலைவர் ஜக்மீத்சிங்கும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் உள்ள சீக்கிய எம்.பி.க்களின் பலத்தை விட கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதேபோல் ட்ரூடோ தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையிலும் கணிசமான சீக்கிய எம்.பி.க்கள் அமைச்சர்களாவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்திய மக்கள் தொகையில் சீக்கியர்கள் 2% பேர் உள்ள நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் பலம் 13 தான். ஆனால் கனடா மக்கள் தொகையிலும் 2% உள்ள சீக்கியர்களில் தற்போது 18 பேர் எம்.பி.க்களாக வென்று சாதித்துள்ளனர். அத்துடன் பிரதமரை முடிவு செய்யும் கிங் மேக்கராக ஜக்மீத்சிங் என்ற சீக்கியர் முக்கியப் பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




