--- --:--:-- --

சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய விசிக நிர்வாகிகள் 12 பேர் கைது..!

2

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேங்கைவயல் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், வேங்கைவயல் பகுதியில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 12 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த நீர்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில், அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் 3 பேரை குற்றவாளிகள் என திமுக அரசு கூறி இருப்பது பலத்த கேள்விகளை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தொடக்கம் முதலே வழக்கு விசாரணையின் போக்கு முறையானதாக இல்லை என்றும், முன்னுக்கு பின் முரணான தகவல்கள் பரப்பப்பட்டு வந்ததாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்பது தான் திமுகவின் நோக்கமாகத் தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Right Menu Icon