பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி என்பவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக ஆடியோ ஒன்று வெளியானது.
இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி அருப்புக்கோட்டை போலீசார் நிர்மலாதேவியை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகினர்.மூவருக்கும் எதிராக, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது.
இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், 82 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், 194 ஆவணங்கள், 46 சான்று பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன.
அனைத்து கட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் நிர்மலாதேவியை குற்றவாளி என நீதிபதி பகவதியம்மாள் அறிவித்தார். அதேநேரத்தில் உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது உரிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார். நிர்மலா தேவிக்கு சிறைத்தண்டனை உறுதியான நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.





