மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைப்பு..!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம், மகளிருக்கு மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து சேவை உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதலமைச்சர் விஜயின் முதல் கையெழுத்து மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் வழங்குமாறும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.mஇதனால், மகளிர் உரிமைத் தொகை போன்ற திமுக அரசின் திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக சட்டப்பேரவையிலும் விவாதம் நடைபெற்றது. திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்ற முதல்வர் விஜயின் அறிவிப்பால், வழக்கம் போல் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என மகளிர் எதிர்பார்த்திருந்தனர். இது தொடர்பாக நிதித் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜயும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் மே மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். இதனால், மே மாதத்திற்கான உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்படாது எனத் தெரிகிறது.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர எதற்காக அவகாசம்? என்ன மறு சீரமைப்பு செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் தருவதாக கூறிவிட்டு, ஆயிரம் ரூபாய் கூட தராமல் இழுத்தடிப்பது தான் மாற்றமா எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் தான் மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நேற்று அறிவித்த நிலையில் இன்றே ரூ.1000 பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்ட பயனர்களுக்கு நேற்று ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வரவு வைத்தது. மாதந்தோறும் 7ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், நேற்று பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் கல்லூரி, மாணவ மாணவியர் நிம்மதியடைந்தனர்.





