நெருங்கும் வடகிழக்கு பருவமழை..!
டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல் கொள்முதல், சேமிப்புக் கிடங்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக இணைந்தனர்.
இதில், நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு மற்றும் அரவை தொடர்பான விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நெல் கொள்முதல் – நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பாக, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோரது கூட்டத்தை இன்று கூட்டினேன்.
சாகுபடியில் சாதனை படைத்துள்ள இந்த ஆண்டில், நெல் கொள்முதல் – நெல் சேமிப்புக் கிடங்குகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி, உழவரின் உழைப்பில் விளைந்த நெல்மணிகள் உலைக்குச் செல்லும் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.





